×

சுற்றுலா பயணிகள் வருகையால் களைகட்டும் பைன் பாரஸ்ட்

ஊட்டி: ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, மழையின் போது விழுந்த மரங்களை கொண்டு அமைக்கப்பட்ட இருக்கைகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டி - கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதி உள்ளது. வனங்களுக்கு நடுவே உள்ள பைன் பாரஸ்ட் பகுதியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

பைன் பாரஸ்ட் நடுவே புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். சாலையில் இருந்து பைன் மரங்களுக்கு நடுவே கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நடைபாதையில் நடந்து சென்று அணையின் அழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் பூங்காக்கள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பைன் பாரஸ்ட், தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் திறக்கப்படவில்லை.

இதை பயன்படுத்தி பைன் பாரஸ்ட் பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பைன் மரங்களுக்கு நடுவே மழையின் போது விழுந்த மரங்களை கொண்டு இருக்கைகள் அமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டன. தொடர்ந்து இம்மாதம் 7ம் தேதி அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்ட நிலையில் பைன் பாரஸ்ட் பகுதியும் திறக்கப்பட்டது. அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். குறிப்பாக, மரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.

Tags : Pine forest ,tourist arrivals , Pine Forest
× RELATED இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள்...